'BHARATPOL' போர்ட்டலை தொடங்கி வைத்தார் அமித் ஷா!. வெளிநாடுகளுக்கு தப்பியோடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதிய முயற்சி!. அம்சங்கள் என்ன?
'BHARATPOL': நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை பிடிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'பாரத்போல்' போர்ட்டலைத் தொடங்கிவைத்தார்.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது. இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளும் நேரடி முகமையாக தற்போது, நம் நாட்டின் சார்பில் சி.பி.ஐ., செயல்படுகிறது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன; கால விரயமும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், சி.பி.ஐ., சார்பில், பாரத்போல் என்ற புதிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி கேட்பதுடன், நம் நாட்டில் பதுங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் குறித்தும் மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் தெரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதால், உள்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மாநில போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உதவும்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த புதிய பாரத்போல் இணையதளத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். இதன், வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உருவாக்கிய போர்ட்டலின் மிக முக்கியமான அம்சம் நிகழ்நேர இடைமுகம் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இது மத்திய மற்றும் மாநில ஏஜென்சிகள் இன்டர்போலுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் அனுமதிக்கும், என்றார். மேலும், தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க இந்திய புலனாய்வு அமைப்புகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தும் நேரம் இது என்று கூறினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில், சிறப்பான சேவையாற்றிய, 35 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி போலீஸ் விருதுகளை அமித் ஷா வழங்கினார்.