அமெரிக்க குடியுரிமை!. சி.பிரிவில் முன்கூட்டியே குழந்தை பெற்றுக்கொள்ள போராடும் இந்திய கர்ப்பிணிகள்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!
American citizenship: அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமைக்கான காலக்கெடு பிப்ரவரி 19-ஆம் தேதி அமல்படுத்தப்படவுள்ள நிலையில், பிரசவ அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு முன்கூட்டியே குழந்தையை பெற்றுக்கொள்ள நினைக்கும் இந்திய கர்ப்பிணிகளுக்கு, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தில், 14வது திருத்தத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப் படாது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோல, தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பிப்., 19 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டிரம்ப்பின் புது உத்தரவு காரணமாக ஏராளமான இந்திய கர்ப்பிணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கர்ப்பிணியாக இருக்கும் ஏராளமான தாய்மார்கள் மருத்துவர்களை அணுகி உள்ளனர். புதிய சட்டம் அமலுக்கு வரும் பிப்.,19க்குள் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்து முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வதுகுறித்து ஆலோசனை செய்கின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதேபோல், இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களின் தொடக்கத்தில் உள்ள பலரும் இதையே கேட்கின்றனர் என்று இதனால் தாய், சேய் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
முன்கூட்டிய பிறப்பு அறுவை சிகிச்சை ஏன் நல்ல யோசனையல்ல? உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு குறைப்பிரசவ சிக்கல்கள் முக்கிய காரணமாகும். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பல உடல்நலச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். "முதலாவதாக, குறைப்பிரசவத்திற்கு, பிரசவ வலியைத் தூண்ட முடியாது, ஏனென்றால் உடல் அதற்குத் தயாராக இல்லாததால் தாய்க்கு மருந்துகள் பதிலளிக்காமல் போகலாம். அறுவைசிகிச்சை சிசேரியன் என்றால், குழந்தையைப் பெறுவது எளிதல்ல என்பதால் அது சிக்கல்களை அதிகரிக்கிறது. , உடலில் பெரிய கீறல்கள் ஏற்படுவதால், இது தாயின் எதிர்கால கர்ப்பத்தை சிக்கலாக்குகிறது. முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் இருந்தாலும், அதனால், தாயார் மற்றும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படும். போதிய நுரையீரல் வளர்ச்சிஇல்லாதது, தாய்ப்பால் கொடுப்பது, எடை குறைந்த குழந்தை பிறப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.