அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயாராக உள்ளோம்!. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!.
Jaishankar: முறையான ஆவணமின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துக் கொள்ள எப்போதும் தயாராக உள்ளோம்,'' என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் தங்கியுள்ள அவர், அந்நாட்டின்புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இந்திய திறமைகளுக்கு உலக அளவில் அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதே நேரம், சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் இடம் பெயர்வதை நாங்கள் உறுதியுடன் எதிர்க்கிறோம்.
ஏனென்றால், சட்டத்திற்குப்புறம்பாக ஏதாவது நடக்கும் போது,பல சட்டவிரோதச் செயல்களும் அதனுடன் சேர்ந்துகொள்கின்றன. இது விரும்பத்தகாதது.பிற நாடுகளைப் போல அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றியோ, விசா காலம் முடிந்தும் வெளியேறாமல் இருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியா அழைத்துக்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். அதே நேரம், அமெரிக்க விசா பெறுவதற்கு 400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. இதில் பரஸ்பர உறவு சரிவர பயன்படவில்லை என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் குறிப்பிட்டேன் என்று கூறினார்.