#Breaking : அம்பேத்கர் பிறந்தநாளை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் : விஜய் சொன்ன வார்த்தையை நோட் பண்ணீங்களா?
சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ அம்பேத்கர் நினைவு நாளில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த வரமாக நினைக்கிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பே நியூயார்க் சென்று அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் ஒருவர் இருந்தார். ஆனால் அவர் எந்த சூழலில் படித்தார் என்பது தான் பெரிய விஷயம்.
அன்று அந்த மாணவருக்கு அத்தனை சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தது. ஆனால் ஒரே ஒரு சக்தி தான் அவரை படி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது. அது தான் அவரின் மனதிற்குள் இருந்த வைராக்கியம். அந்த வைராக்கியம் தான் இன்று இந்த நாட்டின் மிகப்பெரிய ஆளுமையாக மாறியவர். அந்த மாணவர் வேறு யாருமில்லை அம்பேத்கர் தான். அம்பேத்கரின் வைராக்கியம் பிரமிக்கத்தக்கது.
பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசன சட்டத்தை வகுத்து நாட்டிற்கே பெருமை தேடி தந்தவர். சமூக கொடுமை தான் அம்பேத்கரை சமத்துவத்திற்காக போராட வைத்தது. அம்பேத்கரின் வெயிட்டிங் ஃபார் விசா என்ற கோரிக்கை என்னை பிரமிக்க வைத்தது.
ஜனநாயகத்தின் ஆணிவேர் தேர்தல்கள் தான். அந்த தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்தநாளான் ஏப்ரல் 14-ம் தேதியை ’இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்’ என்பது தான் எனது மற்றொரு கோரிக்கை. அதை இந்திய ஒன்றிய அரசிடம் நான் முன்வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
திமுகவினர் மட்டுமே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வரும் நிலையில் இன்று விஜய்யும் ஒன்றிய அரசு என்று கூறியது விவாத பொருளாக மாறியுள்ளது. தனது கட்சியின் முதல் மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் இன்று ஒன்றிய அரசு என்று கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.