ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பதி ராயுடு..!! மக்களவை தேர்தலில் போட்டி..?
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அம்பதி ராயுடு ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 2013 - 2019 வரை விளையாடியவர் அம்பதி ராயுடு. இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010 - 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு, 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயராக வலம் வந்தார்.
இக்கட்டான சூழலில் தவிக்கும்போது அம்பதி ராயுடு தனது சிறப்பான பேட்டிங் திறமையால் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு வெற்றிகளை பெற்று தந்துள்ளார். கடந்தாண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக அம்பதி ராயுடு விளையாடினார். அதில் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அவர் தனது ஓய்வை அறிவித்தார். இதன் மூலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் அவர் விடைபெற்றார்.
அம்பதி ராயுடு ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு ஆட்சி செய்யும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகின. அதன்படியே, அவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அம்பாதி ராயுடு தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், அவர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.