ஆஸ்திரேலிய ஓபனில் அபாரம்!. தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஜானிக் சின்னர்!. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?.
Janik Sinner: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக 2வது முறையாக இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், 2வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சின்னர், 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய சின்னர், 3வது செட்டை 6-3 என வென்றார். இரண்டு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் சின்னர் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' மீண்டும் தட்டிச்சென்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 2வது முறை (2024, 2025) கோப்பை வென்ற சின்னர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தனது 3வது பட்டத்தை கைப்பற்றினார். இவர், கடந்த ஆண்டு யு.எஸ்., ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அமெரிக்காவின் ஜிம் கூரியருக்கு (1992, 1993) பின், ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 2 முறை கோப்பை வென்ற இளம் வீரரானார் (23 வயது) சின்னர். சின்னருக்கு, கோப்பையுடன் ரூ. 30 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜெர்மனியின் ஸ்வெரேவ், ரூ. 16.4 கோடி பரிசு பெற்றார்.
Readmore: 1000 அடியில் விழுந்த பனிச்சறுக்கு வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!. நெகிழ்ச்சி தருணம்!