அமரன் பட எதிர்ப்பு... நெல்லை அலங்கார் தியேட்டர் மீது குண்டு வீச்சு..! முக்கிய குற்றவாளி கைது...!
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி மேலப்பாளையம் இம்தியாஸ் 42, தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் திரையரங்கு வளாகத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வெடி பொருட்கள் சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெளியான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
வழக்கு தொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது, இதில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அமரன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி மேலப்பாளையம் இம்தியாஸ் 42, தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.