எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும்!. முப்படை தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்!
Rajnath singh: இந்தியா அமைதியை விரும்பும் நாடு எனவும், ஆனால் அந்த அமைதியை நிலைநாட்ட ராணுவ எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
லக்னோவில் முப்படை கமாண்டர்களின் ஒருங்கிணைந்த மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அதன்படி, நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் போர்களை சுட்டிக்காட்டி எதிர்கால சவால்களை முன்கூட்டியே அறியவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பாரம்பரிய மற்றும் நவீன போர் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், உலகளவில் நிலவி வரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தியாவில் அமைதியான சூழல் நிலவி வருவதாகவும், இருப்பினும் நம்மை சுற்றி நடக்கும் விவகாரங்களை கவனமாக கண்காணித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்கவேண்டும் என்றும் எந்த இடத்தில் பழைமையான போர் முறைகளை பயன்படுத்தவேண்டும், எங்கு நவீன தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என்பது குறித்து கமாண்டர்கள் கண்டறிந்து இரண்டையும் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.