அதிர்ச்சியில் திமுக வட்டாரம்...! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு... புதிய புயலை கிளப்பிய அண்ணாமலை...!
அமைச்சர் விரும்பியவர்களுக்கே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் என்ற சூழலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவுக்கு எதிராக அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் என்னும் பெயரில் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சகன், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அடுத்ததாக திமுக பைல்ஸ் 2ம் பாகம் வெளியிட்டார். அதில் டெண்டரில் நடந்த முறைகேடுகள் இடம்பெற்றிருந்தது. அண்ணாமலை திமுக பைல்ஸ் வெளியிட்டதை அடுத்து திமுகவினர் அவர் மீது வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 14-ம் தேதி அண்ணாமலை திமுக பைல்ஸ் 3-யை வெளியிட்டார். ஆடியோ பைலாக வெளியிட்ட அண்ணாமலை 2ஜி ஊழல் வழக்கில் திமுக என்னென்ன செய்தது என்ற விவரங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து ‘திமுக பைல்ஸ் பாகம் மூன்றின்’ 3-வது ஆடியோ பதிவை அண்ணாமலை எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில், திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக பைல்ஸ் பாகம் மூன்றின் 3-வது ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்; 2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையேயான உரையாடல்களை வெளியிட்டுள்ளோம். ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த கதைகள் மூலம் சிபிஐ விசாரணையை தடம் மாறச் செய்துள்ளனர். அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு, அனைத்து விஷயங்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.