தீபாவளி அன்று அனைத்து கட்டணங்களும் ரத்து!… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதாகவும், அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் பல்வேறு சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், நவம்பர் 9ஆம் தேதி மாதாந்திர ஏகாதசி, 11ஆம் தேதி சிவராத்திரி, 12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 13ஆம் தேதி கேதார கௌரி விரதம் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ஆம் தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17ஆம் தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.
தீபாவளி தினமான வருகிற 12ஆம் தேதி காலை 7:00 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாவளி ஆஸ்தானம் ( தர்பார்) நடைபெறும். ஆஸ்தானத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார். உடன் ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். தொடர்ந்து உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகளுடன் ஆஸ்தானம் (தர்பார்) நடைபெறும். ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்று மாலை திருப்பதி மலையில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளையும் தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
இதனிடையே வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி முதல் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. தினசரி 20ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.