அமித்ஷா கொடுத்த வார்னிங்! தமிழிசை வீட்டுக்கே சென்று பேசிய அண்ணாமலை! பஞ்சாயத்து ஓவர்..
முன்னாள் ஆளுநரும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கிய தமிழிசை சௌந்தரராஜனுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாட்களிருந்து அனைவரின் கவனமாக கோவை மாவட்டமும் அங்கு போட்டியிடும் அண்ணாமலை மீதும் தான் இருந்தது.அதுபோல தேர்தல் சமயத்தில் சரமாரியாக பல வாக்குறுதிகளையும் வாரி இறைத்து விட்டார். முடிவுகள் வெளிவந்ததையடுத்து பாஜக ஒரு இடத்தில் கூட வராததால் பலரது கேலி கிண்டலுக்கும் அண்ணாமலை ஆளாக நேரிட்டது.
இதுஒருபுறமிருக்க, தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான தமிழிசை சவுந்தராரஜன், சொந்த கட்சியினர் மீதே பகிரங்கமாக குற்றம் சாட்டினார். “தமிழக பாஜவில் தற்போது குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர். நான் தலைவராக இருந்த போது கட்சியில் சேருவதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தேன். இதனால் மிகவும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அப்படி இல்லை.” என தமிழிசை தெரிவித்தார்.
மேலும், “தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் பாஜக ஐடி விங் நிர்வாகிகள் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.” எனவும் தமிழிசை எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறு இருவருக்கிடையே மோதல்கள் இருந்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அமித்ஷா இவரை பொது மேடையில் கண்டித்ததாக விவாதம் ஒன்று தீயாக பரவியது. அப்போது, தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை மறுப்பது போல் சைகை காட்டி அமித் ஷா எச்சரிப்பது போன்ற பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பரபரப்பு முடிவதற்குள்ளேயே இன்று தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை சென்று சந்தித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசையை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல, அண்ணாமலையின் பதிவை பகிர்ந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி.” என தெரிவித்துள்ளார். சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்துப் பேசியதன் மூலம் பாஜகவில் சமாதானம் திரும்பும் எனத் தெரிகிறது.
Read more ; குக் வித் கோமாளி ஷோ-வில் இருந்து விலக இதுதான் காரணம்..! உண்மையை உடைத்த பிரபலம்!!