"அலங்காநல்லூர் வாடியை அலறவிட்ட கட்டப்பா.." கொம்பு வச்ச சிங்கமடா.! கார் பரிசை தட்டிச் சென்ற உரிமையாளர்.!
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரவாரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அவனியாபுரம் பாலமேடு ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க கோலாகலமாக தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாபகமாக பிடித்த காட்சிகள் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 652 காளைகள் மஞ்சுவிரட்டிற்கு விடப்பட்டது. இதில் 194 காளைகள் பிடிமாடாயின. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மேலூர் குணாவின் கட்டப்பா என்ற காளை யாருக்கும் அடங்காத சிங்கமாக வலம் வந்தது.
கொம்பில் சுற்றிய மல்லிகைப்பூவுடன் வாடியிலிருந்து சீறிப்பாய்ந்த இந்த காளை வீரர்களிடம் என்னை தொட்டுப்பார் என சவால் விட்டது. எந்த ஒரு மாடு பிடி வீரராலும் கட்டப்பா காளைகள்யிடம் நெருங்க கூட முடியவில்லை. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 மாடுகளை அடக்கிய அபி சித்தர் இரண்டாம் பரிசான பைக்கை வென்றார்.
இந்த வருட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மேலூர் குணாவின் கட்டப்பா காளைகள் சிறந்த காளைகள் விருதை வென்றது. அந்தக் காளையின் உரிமையாளர் குணாவிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த வெள்ளை காளி சௌந்தர் என்பவரது மாடு இரண்டாவது சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இந்த வருட ஜல்லிக்கட்டு கொம்பில் பூவை சுற்றிக்கொண்டு சீறிப்பாய்ந்த கட்டப்பா காளை அனைவரின் கவனத்தையும் பெற்றது.