மிருகங்களிடமும் மத துவேசமா.? "அக்பர் - சீதாவை ஒரே கூண்டில் அடைக்க எதிர்ப்பு"… உயர் நீதிமன்றத்தை நாடிய இந்து பரிஷத்.!
அக்பர் என்ற ஆண் சிங்கத்துடன் சீதா என்ற பெண் சிங்கத்தை அடைக்கக் கூடாது என வலியுறுத்தி இந்து பரிசத் அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாகவே மதம் தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.
பசு பாதுகாவலர்கள் லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டங்கள் என மக்களைப் பிரித்து பகைமையை ஏற்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனிதர்களுக்கிடையே பரப்பப்பட்ட மதம் சார்ந்த துவேசங்கள் தற்போது விலங்குகள் இடத்திலும் காட்டத் தொடங்கி இருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தின் சிலிகுரி பகுதியில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது .
சமீபத்தில் இந்த சரணாலயத்திற்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து ஒரு ஆண் சிங்கம் மற்றும் பெண் சிங்கம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. பொது மக்களின் பார்வைக்காக 2 சிங்கங்களையும் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர்கள் ஒரே கூண்டில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் அக்பர் என்று பெயரிடப்பட்ட சிங்கத்துடன் சீதா என்று பெயரிடப்பட்ட சிங்கத்தை எப்படி அடைத்து வைக்கலாம் என்று கூறி இந்து பரிசத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைத்து வைப்பது இந்து மதத்தை அவ மதிப்பதற்கு சமம் என தெரிவித்த இந்து பரிசத் அமைப்பினர் அவை இரண்டையும் தனித்தனியான கூண்டில் அடைத்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.