போர் பதற்றம் காரணமாக விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா!
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் காரணமாக டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை ஏப்ரல் 30 வரை நிறுத்த ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் சில தினங்களுக்கு முன்பு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் ஈரான் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இது மூன்றாம் உலக போருக்கு வழி வகுக்கும் என அச்சம் நிழவி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தில் வரிசையாக ஏவுகணை வீசி இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டமான சூழ்நிலை காரணமாக டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, "நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். போர் பதட்டம் நீடித்து வரும் இந்த நிலையில் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானங்களை நிறுத்தி வைத்துள்ளோம். பயணத்திற்கான முன்பதிவுகளை உறுதிசெய்துள்ள எங்கள் பயணிகளுக்கு மறுசீரமைப்பு அல்லது பணத்தை திருப்பி தர முயலுகிறோம்.
மேலும் தகவல் தேவைப்படும் பயணிகள் 24/7 தொடர்பு மையத்தை 011-69329333 / 011-69329999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது airindia.com ஐப் பார்வையிடவும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏர் இந்தியாவில், எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.