அதிமுக ஒருங்கிணைப்பு!. இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் சசிகலா!
Sasikala: 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' எனும் பெயரில் இன்றுமுதல் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்காசியில் இருந்து தன் முதல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா…அதில், ```நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தீர்மானிப்பது, மக்கள்தான். இந்த தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க குறித்து எல்லோருக்கும் புரியும். அ.தி.மு.க ஒன்றாக இணைவதற்கான நேரம் வந்துவிட்டது. நான், என் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரே அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும். நான் அமைதியாக இருப்பதற்கான விடை விரைவில் கிடைக்கும்" என்றார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, “கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் 'ஜெயலலிதா இல்லம்' அன்புடன் வரவேற்கிறது” என அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, கடந்த ஜூன் 16-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, பொதுமக்களுக்கு அதிமுக என்றால் பிரியம் அதிகம். நல்ல நேரம் இப்போது வந்துவிட்டது. காலம் கணிந்துள்ளது. இதையே எப்போதும் சொல்கிறேன் என எண்ண வேண்டாம். இதுதான் சரியான நேரம். நிச்சயமாக தமிழக மக்கள் நம் பக்கம்தான். அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க முடியாது. என்னுடைய என்ட்ரி இப்போது ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எனக்காக இருக்கிறார்கள். 2026-ல் அம்மாவுடைய ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். தனிப்பெருங்கட்சியாக இருப்போம்” என தடாலடியான கருத்துக்களைத் தெரிவித்தார்.. ஆனால், ` ஜானகி அம்மாவைப் போல சசிகலா செயல்பட வேண்டும்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியிருந்தார்.
இந்தநிலையில்தான் கடந்த ஜூலை 8-ம் தேதி, எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததாக செய்திகள் வெளியானது… நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து, இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அப்போது, தஞ்சை தொகுதிக்கான நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்ததாக தகவல்கள் வெளியானது…
இந்தநிலையில், இன்றுமுதல் அதிமுக ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா தொடங்குகிறார். தனது முதல் பயணத்தை தென்காசியில் இருந்து தொடங்கவுள்ளார் சசிகலா. தொடர்ந்து, கடையநல்லூர், வாசுதேவன் நல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், 4 நாட்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்யவுள்ளார். சசிகலாவை அதிமுக மீண்டும் சேர்க்க கோரிக்கை எழுந்துவரும் நிலையில் அவரின் இந்த பயணம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
Readmore: 33வது ஒலிம்பிக் திருவிழா!. பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற தமிழர்!.