கிண்டி மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு.. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி..!! - அமைச்சர் மா சுப்பிரமணியன்
சென்னை மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, கிண்டி கலைஞர் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி விக்னேஷ் உடன் வேறு யாரேனும் வந்தார்களா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அரசு மருத்துவர்கள் சேவை நோக்கில் பணியாற்றி வருகின்றார்கள்.
குறிப்பாக தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். போலியான குறைபாடு காரணத்தை கூறி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அதேப்போல் சென்னை கிண்டி பன்நோக்கு அரசு மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று சங்கங்கள் கோரிக்கை வைத்தனர். பேச்சுவார்த்தை முடிந்து சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை”
என தெரிவித்தார்.
Read more ; மற்றொரு அதிர்ச்சி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்..!!