பாலில் கலப்படம்!! கண்டறிவது எப்படி? எளிய பரிசோதனை முறைகள் இதோ!!
பாலில் கலப்படத்தை கண்டறிய எளிமையான பரிசோதனையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் குடிக்கும் பாலில் எதாவது கலப்படம் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவும் அதன் தரத்தை சோதித்துப் பார்க்கவும் நாம் வீட்டிலேயே சில பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். பாலில் உள்ள பொதுவான கலப்படத்தை கண்டறிய உதவும் இந்த எளிமையான பரிசோதனையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு முறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாலில் தண்ணீர் கலப்படம்:
ஒரு துளி பாலை எடுத்து சாய்வான தரையில் விட்டு, என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். தூய்மையான பாலாக இருந்தால், பால் துளி அதேயிடத்தில் இருக்கும் அல்லது மெதுவாக வடியும். அதுவே தண்ணீர் கலந்த பால் என்றால், வேகமாக கீழே வடியும். ஏனென்றால் கலப்படமற்ற பாலில் பிசுபிசுப்பும் இழுவிசையும் அதிகமாக இருக்கும்.
பாலில் மாவு கலப்படம்:
2-3 மில்லி பாலை கொதிக்க வைத்து குளிர வைக்கவும். அதில் 2-3 துளிகள் அயோடின் கரைசலை ஊற்றவும். கலப்படமற்ற பாலாக இருந்தால் நிறம் எதுவும் மாறாது அல்லது லேசாக மஞ்சள் நிறத்தில் மாறும். மாவுப்பண்டம் எதுவும் கலந்திருந்தால் பாலின் நிறம் நீலமாக மாறியிருக்கும்.
பாலில் டிடர்ஜெண்ட் கலப்படம்:
கண்ணாடி க்ளாஸில் 5 மில்லி பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவு தண்ணீரை பாலில் சேர்க்கவும். பின்னர் இந்த கலவையை நன்றாக குலுக்க வேண்டும். பாலில் கலப்படம் இல்லையென்றால் நுரை எதுவும் வராது அல்லது லேசாக வரும். டிடர்ஜெண்ட் கலந்திருந்தால் பாலிலிருந்து நுரை பொங்கிக்கொண்டு வரும்.
பாலில் யூரியா கலப்படம்:
டெஸ்ட் டியூபில் 5 மில்லி பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவு சோயாபீன் அல்லது பருப்பு பொடியை பாலில் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு இதை நன்றாக குலுக்கவும். இந்த கலவையில் இப்போது ரெட் லிட்மஸ் தாளை நனைக்க வேண்டும். பாலில் கலப்படம் இல்லையென்றால் ரெட் லிட்மஸ் தாள் நிறம் மாறாது. ஒருவேளை பாலில் யூரியா கலந்திருந்தால் ரெட் லிட்மஸ் தாள் நீல நிறமாக மாறியிருக்கும்.
பாலில் ஃபார்மலின் கலப்படம்:
டெஸ்ட் டியூபில் 10 மில்லி பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2-3 துளிகள் செறிவூட்டப்பட்ட சல்ஃபுரிக் ஆசிடை டெஸ்ட் ட்யூப் ஒரங்களில் ஊற்றவும். இந்த சமயத்தில் எக்காரணம் கொண்டும் அசைத்துவிடக் கூடாது. பாலில் கலப்படம் இல்லையென்றால் இரண்டுக்கும் நடுவே எந்தவித நிறமும் மாறியிருக்காது. அதுவே ஃபார்மலின் கலந்திருந்தால், பாலிற்கும் ஆசிடிற்கும் இடையே நீல நிறத்தில் வளையம் போல் தோன்றும்.
செயற்கை பால் கலப்படம்:
5 மில்லி பாலில், அதேயளவு தண்ணீரை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக குலுக்கவும். கலப்படமற்ற பால் என்றால் நுரை வராது. செயற்கை பால் என்றால் நுரை பொங்கும்.
Read More: