For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ADMK கொடி மற்றும் சின்னம்!... ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு!

07:45 AM Mar 17, 2024 IST | 1newsnationuser3
admk கொடி மற்றும் சின்னம்     ஓபிஎஸ் க்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு
Advertisement

ADMK: அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

Advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு நீதிபதி, என்.சதீஷ்குமார் முன்பு கடந்த மார்ச் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர், "அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால கோரிக்கையைதான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நிலுவையில் உள்ள மூல வழக்கில், தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில்தான், கட்சியில் இருந்து சிலரை நான் நீக்கினேன். அதற்கு எனக்கு உரிமை உள்ளது. எனக்கு பின்னால் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது, என்பதால் எனக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, நிலுவையில் உள்ள மூல வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். அதற்கு தயாராக இருக்கிறோம். மேலும், எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காக கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு தொண்டர்களை சந்திப்பதற்கான சுதந்திரம் தனக்கு வேண்டும். மேலும், கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த தங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் தேர்தல் ஆணையத்தை நாட முடியாத நிலை ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக பதிலளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "இடைக்கால கோரிக்கையை நிராகரிக்கும் போது மூல வழக்கை தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடுவது வழக்கமான நடைமுறைதான். ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் கூறவில்லை.

ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர் செல்வம் தன்னை அழைத்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதைதான் எதிர்க்கிறோம். அவர் வேண்டும் என்றால், வேறு ஒரு கட்சியைத் தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என அழைத்துக்கொள்ளட்டும்" என வாதிடப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தற்போது, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: அதிர்ச்சி!… அதிரடியாக உயர்த்தப்பட்ட நூல் விலை!… கிலோவுக்கு எவ்வளவு தெரியுமா?… ஜவுளித் தொழில் கடும் பாதிப்பு!

Tags :
Advertisement