சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி..! தினமும் காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து..!
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது, தெலுங்கு பேசினாலும் அந்த மக்களும் தமிழகத்தின் ஒரு பகுதியினர் தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தார். மேலும், கஸ்தூரியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
நடிகை கஸ்தூரி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பப்பலகுண்டாவில் திரைப்பட தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர், சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் கணவர் ஆதரவில்லாமல் தான் தனிமையில் வசித்து வருவதாகவும், தனக்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ளதாகவும், அவன் ஹைதராபாத்தில் படித்து வரும் நிலையில், தான் அங்கே இருந்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும், தன்னை சிறையில் அடைத்தால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டார். ஆனால், கஸ்தூரியின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நடிகை கஸ்தூரி சார்பில் ஜாமீன் கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
நேற்றைய தினம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து தற்போது புழல் சிறையில் இருந்து அவர் வெளியே வந்துள்ளார். மேலும் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திடவேண்டும் என்று கஸ்தூரிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Read More: 1 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!!! கள்ளக் காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!!