நடிகர் சூரிக்கு வந்த புது சிக்கல்..!! ஓட்டல் உணவு இப்படித்தான் தயாரிக்கப்படுகிறதா..? மாவட்ட ஆட்சியருக்கு பறந்த பரபரப்பு புகார்..!!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் செப்டிங்டேங்க் அருகே உணவு தயாரித்து சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருவதாகவும், உணவகத்திற்கு சீல்வைக்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்திருக்கிறார்.
பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த ஜூன் 2022ஆம் ஆண்டு நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் தொடங்கப்பட்டது. பொதுப்பணி துறையால், 434 சதுரடி பரப்பில் மட்டுமே உணவகம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், செவிலியர் விடுதியில் கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் விதிமுறைகளை மீறி கூடுதலாக 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான முத்துக்குமார் என்பவர் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், அம்மன் உணவகத்தின் அருகே அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட கழிவுநீர் தேங்கும் செப்டிக் டேங்க்குகளின் நடுவே தான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் இருக்கிறது. செவிலியர் விடுதியின் ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்திருக்கின்றனர்.
இதனால் அங்கு தங்கியுள்ள செவிலிய மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அம்மன் உணவகத்தின் அருகில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இதனால் கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் உணவு வகைகளால் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது.
எனவே, அம்மன் உணவகத்தில் ஆய்வு நடத்தி சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் முத்துக்குமார், ‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரவுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.