குட் நியூஸ்... தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
ரேஷன் கடைக்கு உட்புறமும், வெளிபுறமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. பொருட்களை வாங்கும் மக்களுக்கும் விற்பனையாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கடை விற்பனையாளர் மக்களை தரக்குறைவாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இதனை போக்க கூட்டுறவுத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவோடும், மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது.
மேலும் ரேஷன் கடை ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், சண்டையிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ரேஷன் கடைக்கு உட்புறமும், வெளிபுறமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.