கேப்டன் ருதுராஜின் அதிரடி ஆட்டம்!... ஐதராபாத்தை காலி செய்த CSK… புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
IPL: கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி ஆட்டத்தால், 78 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 46வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரகானே, கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கினர். ரகானே 9 ரன் எடுத்து ஏமாற்றமளித்தார்.
தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ருதுராஜ், டேரில் மிட்செல் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். ருதுராஜ் 32 பந்திலும், மிட்செல் 29 பந்திலும் அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு107 ரன் சேர்த்தது. மிட்செல் 52 ரன் (32 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி உனத்கட் பந்துவீச்சில் நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ருதுராஜ் – ஷிவம் துபே ஜோடி சேர்ந்து அதிரடியைத் தொடர, சூப்பர் கிங்ஸ் ஸ்கோர் ஜெட் வேகத்தில் பறந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் 98 ரன் (54 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நடராஜன் பந்துவீச்சில் நிதிஷ் குமார் வசம் பிடிபட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது.
ஷிவம் துபே 39 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), எம்.எஸ்.தோனி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் ஹெட் (13 ரன்), அன்மோல்பிரீத் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி சரிவை சந்தித்தது. அபிஷேக் ஷர்மா 15 ரன் எடுத்து தேஷ்பாண்டே வேகத்தில் வெளியேற மேலும் பின்னடைவு ஏற்பட்டது.
இதனால் ஐதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன் எடுத்தது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மார்க்ரம் அதிகபட்சமாக 32 ரன் (26 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார். சென்னை அணியின் பந்துவீச்சில் தேஷ்பாண்டே 4 விக்கெட், முஸ்டபிர் ரகுமான், பதிரானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 9 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்து 3 வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளது.
Readmore: Central Govt | தொற்று நோய் அபாயம்.!! மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு.!!