ஏசி இதற்காகத் தான் கண்டுபிடிக்கப்பட்டதா?… இதை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க…!!
ஏசி இல்லாத இடங்களே இல்லை என்ற அளவிற்கு அதன் தேவை இன்று அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த ஏசி இன்று நடுத்தர மக்களிடமும் இருக்கிறது. வெயிலில் இருந்து நம்மை காக்கும் சாதனமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் ஏசியை நாடுகின்றனர். இன்று எல்லோருக்கும் குளிர்ச்சி கொடுக்கும் ஏசியை கண்டுபிடித்தவர் "வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர்". இவர் அமெரிக்காவின் அங்கோலா என்ற இடத்தில் 1876ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பிறந்தார் . இவருக்கு சிறுவயதில் இருந்தே சிறு சிறு இயந்திரங்களை இயக்கிப் பார்த்து மகிழ்ச்சி அடைவதை வழக்கமாக கொண்டிருந்தார். வில்லிஸ் கார்னெல் பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார்.பிறகு ஒரு புகழ்பெற்ற தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார்.பழுதடைந்த இயந்திரங்களை உடனுக்குடன் சீர் செய்வதில் திறமைசாலியாக இருந்த வில்லிஸின் திறமை, வெளி உலகிற்கு பரவியது.
வில்லிஸின் வெற்றி பாதை…! நியூயார்க்கில் புகழ் பெற்ற புத்தக நிறுவனம் ஒன்றில் பிரிண்டிங் இயந்திரம் அடிக்கடி பழுதாகி அந்த நிறுவனத்தை இம்சைப்படுத்தியது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வில்லிஸை பற்றி கேள்விப்பட்டு அவரை தன் நிறுவனத்திற்கு அழைத்து இயந்திரத்தை காண்பித்தார். அப்போது அந்த நிறுவனத்திற்குள் நுழையும்போதே வெப்பம் அதிகமாக இருப்பதை உணர்ந்தார் வில்லிஸ். மேலும்,இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை ஆய்வு செய்தார். அந்த இருப்பிடம் வெப்பத்தாக்குதலாலேயே பாதிக்கப்படுவதை உணர்ந்த அவர், அப்பகுதியில் வெப்பம் அதிகமாய் தாக்காதவாறு இருக்கும் படியான உபகரணங்களை உருவாக்கினார். அந்த உபகரணங்களை அவர் தொழிற்சாலை முழுக்க பொருத்தினார். இதை அவர் செய்த ஆண்டு, 1902. அப்போது அவருடைய வயது, 26 மட்டுமே.
வெப்பக்காற்று உள்ளே நுழைவது தடுக்கப்பட்டு மெல்லியதான ஈரக்காற்றால் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டதால் அவை பழுதின்றி சுழன்றன. அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமுமே இயந்திரங்களை பழுதாக்குகின்றன என்பதை கண்ட வில்லிஸ், மேலும் தீவிரமாக இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக புதிய உபகரணங்களை தயாரித்தார்.
ஏசி கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு..! 1906ம் ஆண்டு, 'ஏர் கண்டிஷனர்'(AC) என்று அழைக்கப்படுகிற கருவியை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார் வில்லிஸ். இந்தக் கருவி வெளி வெப்பத்தை அறைக்குள் தடுப்பதோடு மட்டுமின்றி, ஏற்கெனவே அறைக்குள் சுழன்று கொண்டிருக்கும் வெப்பத்தை குளிர்ந்த நிலைக்கு மாற்றும் அற்புதத்தை செய்து, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மேஜிக்கை உருவாக்கினார்.இவர் உருவாக்கிய ஏ.சி., பயன்பாட்டிற்கு வந்தபோது, அவரின் புகழ் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. பல நிறுவனங்கள், ஏ.சி.,யை பயன்படுத்த விரும்பி அவரை அழைத்தன. மக்களின் வரவேற்பை உணர்ந்த வில்லிஸ், தனி ஏ.சி., தயாரிக்கும் யூனிட்டை ஆரம்பித்தார். இதன் மூலம் மிகப்பெரிய லாபத்தை அடைந்தார்.
தான் உருவாக்கிய ஏ.சி.,யூனிட்களில், 'கம்ப்ரஸர்கள்' அடிக்கடி பழுதாவதை கண்டார். ஏ.சி., இயங்கும் போது, வெப்பநிலைக்கு ஏற்ப கம்ப்ரஸர்கள் செயல்புரிய வேண்டும். அதாவது வெப்பம் அதிகமாகும்போது, குறைகிற போதும் அறைக்குள் ஏ.சி.,யின் குளிர் ஒரே அளவில் இருக்க வேண்டும்.இதை ஆரம்பத்தில், அவர் சரிவர இயங்கும்படி செய்யவில்லை. காலப் போக்கில் கம்ப்ரஸர்கள் அறையின் குளிர் அளவை தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளும்படியாக செட் செய்து செயல் படுத்தினார். இந்த செட்டிங்கை, 1914ம் ஆண்டு உருவாக்கி, அதற்கும் காப்புரிமை பெற்றார்.
இதற்குப் பின்னர் ஏ.சி.யை மேம்படுத்துவதிலேயே தன் சிந்தனையை செலுத்தினார் வில்லிஸ். மக்களுக்கு என்றென்றும் உபயோகமாகும் ஏ.சி.,யை இவ்வுலகிற்கு தந்த வில்லிஸ், 1950ம் ஆண்டு அக்டோபர், 7ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். அன்று வில்லிஸ் சிறிது சிறிதாக பார்த்த விஷயங்களும், அவர் கொண்டிருந்த ஆர்வமுமே ஏசி கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. கோடை காலங்களில் அற்புத கருவியாக விளங்கும் ஏசியை கண்டுபிடித்த வில்லிங்ஸ்க்கு நன்றி சொல்ல நாம் அனைவரும் கடமைபட்டுள்ளோம்.
Read More: “உன்னை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்..” – 10 வயது சிறுவனுக்கு உதவ முன்வரும் ஆனந்த் மஹிந்திரா!