4 மாதங்களாக மாயமான இளைஞர்..!! ஆற்றில் கொன்று புதைத்த உயிர் நண்பன்..!! உயிரோடு இருப்பது போல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..!! விழுப்புரத்தில் பயங்கரம்..!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், சேமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் முத்துக்குமரன் (27). இவர், விவசாய பணிகளை செய்து வருகிறார். முத்துகுமாரனின் நெருங்கிய நண்பர் தமிழரசன். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற முத்துக்குமரன், மீண்டும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் பதறியடித்து தேடி வந்தனர். மேலும், அவரது நண்பர் தமிழரசனுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அவரும் முத்துகுமாரனை தேடி வந்துள்ளார்.
எங்கு தேடியும் முத்துக்குமரன் கிடைக்காததால், திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் முத்துக்குமரனை காணவில்லை என அவரது பெற்றோர் புகாரளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் கிடப்பில் போட்டனர். விசாரணை தொய்வடைந்த நிலையில், தந்தை முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அவரது நண்பர் தமிழரசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, முத்துகுமாரனை தான் கொலை செய்து ஆற்றில் புதைத்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ரூ.8 லட்சம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், சம்பவத்தன்று முத்துகுமாரனை கொலை செய்து ஆற்றில் புதைத்தது அம்பலமானது. செப்டம்பர் 19ஆம் தேதி கொலை சம்பவம் நடந்த நிலையில், 4 மாதங்கள் கழித்து சம்பவம் உறுதியாகியுள்ளது.
மேலும், முத்துக்குமரன் தாமாக மாயமாகி, விசாரணை தன்பக்கம் திரும்ப கூடாது என முத்துகுமாரனின் வாட்ஸப்பில் தமிழரசன், முத்துகுமாரனை போல ஸ்டேட்டஸ் வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, முத்துக்குமார் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டி பார்த்தனர். ஆனால், உடல் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மழை வெள்ளப்பெருக்கின்போது உடல் அடித்து செல்லப்பட்டதா? என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.
இதனால் வேறு எங்காவது கரை ஒதுங்கியதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், அடுத்த 2 மாதத்தில் அதாவது நவம்பர் மாதத்தில் தமிழரசனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், முத்துக்குமரனிடம் ஏமாற்றிய பணத்தை புதுமாப்பிள்ளையான தமிழரசன் என்ன செய்தார்..? திருமண செலவுக்கு பயன்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்காவது கொடுத்தாரா? மேலும் இந்த கொலையில் உடலை புதைக்க தமிழரசனின் நண்பர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Read More : வீட்டு வைத்தியம் மூலம் பல் சொத்தை, பல் வலியை குணப்படுத்தலாம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க..!!