”ஆளுநர் ஆணவமாகவும், திமிராகவும் செயல்படுகிறார்”..!! ”3-வது முறையாக தொடர்ந்து ஹாட்ரிக்”..!! ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி கடும் விமர்சனம்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ். பாரதி, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய கனிமொழி எம்பி, ”சட்டப்பேரவையில் 3-வது முறையாக உரையை புறக்கணித்து ஆளுநர் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். அவையில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தொடர்ந்து ஆளுநர் கொச்சைப்படுத்தி வருகிறார்” என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ”ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவமாகவும், திமிராகவும் செயல்பட்டு வருகிறார். தேசிய கீதத்தை அவமதித்தவர் அவர்தான். இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக தமிழ்நாடு முதல்வர் இருக்கிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளுநர் இவ்வாறு செய்கிறார். ஆளுநர் தகராறு செய்யச் செய்ய முதல்வரின் புகழ் உச்சமடையும்” என்று தெரிவித்தார்.