திமுகவுக்கு எதிரான ஆயுதம்!. பாஜகவுக்கும், விஜய்க்கும் இப்படியொரு தொடர்பா?. ரகசியத்தை உடைத்த திருச்சி சூர்யா!
Trichy Surya: தமிழ்நாடு பா.ஜ.க.வை தினந்தோறும் அலறவிடுகிற, அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற பரபரப்பான அரசியல்வாதியாக திருச்சி சூர்யா வலம்வருகிறார். பல்வேறு அதிரடியான, அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுவரும் திருச்சி சூர்யாவை, தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில், விஜய் கட்சி ஆரம்பிப்பதற்குப் பின்னால் பாஜகவின் தூண்டுதல் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் திருச்சி சூர்யா. அதாவது பாஜகவின் பி டீம் தான் தவெக என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். திமுகவை அடுத்த தேர்தலில் வெற்றி பெறவிடாமல் தடுக்கவே விஜய் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்றும் இது நீண்டகால திட்டம் என்றும் விளக்கியுள்ளார்.
இது பற்றி திருச்சி சூர்யா ஒரு யூடியூப்க்கு அளித்துள்ள பேட்டியில், "அண்ணாமலை நினைத்திருந்தால் திருச்சியில் என்னை வேட்பாளராக நிறுத்தி இருக்க முடியும். ஆனால் எனக்குச் சீட்டுக் கொடுக்கக் கூடாது என்றே கழுத்தை அறுத்தார். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் திருச்சியில் அமமுக வேட்பாளரை டம்மியாக நிறுத்தினார். அமமுக 4வது இடம் வந்திருக்கிறது. நாம் தமிழர் 3வது இடம். இதைவிடக் கேவலம் என்ன இருக்கிறது சொல்லுங்கள். என் பெயருக்கு முன்னால் இருக்கின்ற திருச்சியைக் கூட எடுத்துவிடலாமா என்று யோசித்து வருகிறேன்.
தற்பெருமையாகச் சொல்லவில்லை. நான் நின்றிருந்தால், நல்ல வாய்ப்பு பாஜகவுக்குக் கிடைத்திருக்கும். அதிமுக வேட்பாளர் ஒன்று பிரபலம் இல்லை. அமமுக வேட்பாளரும் அப்படித்தான். மதிமுகவுக்கு பம்பரம்தான் அடையாளம். அவர் இந்த முறை தீப்பெட்டி சின்னத்தில் நின்றார். ஆகவே, நல்ல பிரகாசமான வாய்ப்பு இருந்தது. கட்சியில் நான் இணைந்தபோதே அண்ணாமலை நிர்வாகிகள் மத்தியில் என்னை எம்பி வேட்பாளர் என்று முன்பே பல முறை பேசி இருக்கிறார். ஆனால், சமயம் பார்த்து அதைச் செய்யத் தவறிவிட்டார்.
தமிழ்நாட்டில் பாஜக இரண்டு நடிகர்களைத்தான் டாக்கெட் செய்தது. அதில் ஒருவர் ரஜினி. அடுத்து விஜய். இந்த இருவரின் பின்னால் பாஜகவின் திட்டம் ஒளிந்துள்ளது என்பதைப் போட்டு உடைத்துள்ளார் திருச்சி சூர்யா. "ரஜினியை வைத்து தனிக்கட்சி தொடங்க பாஜக பல முயற்சிகளைச் செய்தது. ஆனால், கடைசி வரை வருகிறேன் என்று சொன்ன ரஜினி அதிலிருந்து தப்பித்துவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யை பாஜக மேலிடம் தயார் செய்தது.
மோடி கடந்த 2019 தேர்தல் சமயத்தில் தமிழகம் வந்த போது கோவையில் விஜய்யைச் சந்தித்தார். அப்போது பாஜக ஒரு வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டது. அதை வைத்துத்தான் விஜய் இப்போது கட்சி ஆரம்பித்துள்ளார். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைப் போட்டார். இறுதியில் அவர் ஒருவர் மட்டும்தான் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் தான் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அதைப்போல விஜய் எடுத்தவுடன் முதல்வராக முடியாது. அவரது கட்சி முதல் தேர்தலில் 8% வாக்குகளைப் பெறும். அதை நம்பித்தான் பாஜக அவரை களத்தில் இறக்குகிறது.
அவர் திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க உதவுவார். விஜய் கட்சியின் பின்னால் பாஜக இருப்பதைப் போல தெரியக் கூடாது என்பதே திட்டம். அப்படித் தெரிந்தால் ஓட்டு விழாது. அதனால் தான் அவர் தனியாகக் களம் காண்கிறார். இன்று ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் தெரியுமா? அப்படிப் பார்த்தால் விஜய் கடந்த 40 படங்களில் வாங்கிய மொத்த வருமானமும் போய்விடும். அதை அவர் உணர மாட்டாரா என்ன? விஜய் அரசியலுக்கு வருவதற்குப் பின்னால் பாஜகவின் திட்டம் கட்டாயம் உள்ளது. அவர் பாஜக பி டீம் தான். அதில் சந்தேகமே இல்லை.
Readmore: ராகுல் காந்திக்கு எச்சரிக்கை!. நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைவேன்!. பாஜக MLA சர்ச்சை பேச்சு!