தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமமா? 450 ஆண்டுகளாக மது, புகை பிடிப்பதற்கு தடை!!
மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த நவீன காலத்தில், மது மற்றும் புகை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.
3,000 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில், 450 ஆண்டுளுக்கு மேலாக மது மற்றும் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும், கடவுள் மீது உள்ள பக்தி மற்றும் மரியாதைக்காகவும், பழங்கால மரபுகளை மதிக்கும் வகையிலும் இங்கு மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் கூறுகினர். மேலும், இந்த கிராமத்தில் கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், காலணிகள் அணிவதை தவிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் பிறந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், இந்த ஊருக்கு புதிதாக வரும் மக்களுக்கும் இதை அறிவுறுத்துகின்றனர். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடக்கூடாது என்று சொல்லி வளர்க்கின்றனர். இங்குள்ள எந்த கடைகளிலும் ப்ளாக்கில் கூட மது , சிகரெட் விற்கப்படுவதில்லையாம். எல்லைக்கு வெளியே தான் எல்லாம் நடக்குமாம்.
அதே போல இந்த ஊரில் உள்ள மக்கள் திருமணம் , திருவிழா போன்ற நிகழ்வுகளில் கூட குதிரை மீது அமர்ந்து பயணிப்பதில்லை. கள்ளழகரின் வாகனம் குதிரை என்பதால் அதற்கு மரியாதையை கொடுப்பதாகவும் தெய்வ உடையதாக நினைப்பதால் அதையும் சாதாரண மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர்.
Read more ; பெண் தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் பலி!. திருமண ஊர்வலத்தின்போது விபரீதம்!