வெயில் காரணமாக செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு..!
அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தான் வழக்கமாக வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. இந்த அளவுக்கு வெயிலின் தாக்கத்தை தமிழக மக்கள் இதுவரை கண்டதில்லை. மேலும் இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை. நேற்று மட்டும் 21 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதேபோல இன்று 15 மாவட்டங்களுக்கு அதீத வெப்ப அலை குறித்து ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருந்தது.
இப்படி கடும் வெயிலால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் வெயிலின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் தொலைக்காட்சி (சன் டிவி) செய்தியாளர் ராஜா சங்கர் இன்று மே 2 காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், அருப்புக்கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
வெயில் காரணமாக சில தினங்களுக்கு முன் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வெயில் காரணமாக ஒன்னொரு மரணமும் நிகழ்ந்துள்ளது.