திமுக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்…! 10 பேர் புதுமுகம்..!
தமிழக்தில் 21 தொகுதிகளில் திமுக தனித்து போட்டியிடுகிறது, இதன் வேட்பாளர் பட்டியால் இன்று வெளியாகவுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு என தகவல்
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடக்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நேற்றுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட 2 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகளையும், விசிகவுக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளும், மதிமுகவிற்கு திருச்சி தொகுதியையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை, வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரம்புதூர், அரக்கோணம், காஞ்சிபுரம், ஆரணி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, பெரம்பலூர், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, தேனீ, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி என 21 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது. மேலும் நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூரில் கே.சுப்பராயன், நாகையில் வை.செல்வராஜ் போட்டியிடுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் தற்போதைய எம்.பி.யான சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தமும் போட்டியிடுகின்றனர், மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ, நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரம் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இன்று காலை 10மணிக்கு வெளியிட உள்ளார். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் மீண்டும் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல் மூலம் அறியப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 10க்கும் மேற்பட்ட புதுமுக வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுகவின் வேட்பாளர் பட்டியலில் சென்ற காலங்களை போல வாரிசுகளின் பெயர்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.