மண்டையை பிளக்கும் ஒற்றைத் தலைவலி!! எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
சாதாரண தலைவலியை காட்டிலும் ஒற்றைத் தலைவலி மிக மோசமான வலியைத் தரக்கூடியது. இந்த ஒற்றை தலைவலி ஏன் வருகிறது, அதற்கான காரணங்கள் என்ன?
வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே தலைவலி ஏற்படுகிறது. சாதாரணமான தலைவலி 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே நீடிக்கும். ஓய்வெடுப்பதன் மூலமோ அல்லது வலி நிவாரிணிகளை பயன்படுத்துவதன் மூலமோ இந்த தலைவலியை எளிதில் விரட்டியடிக்கலாம். ஆனால், ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை காட்டிலும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியது. ஒற்றைத் தலைவலியின் அறிகுறி ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். பெரும்பாலும், இந்த அறிகுறிகள் முழுக்க முழுக்க தலைவலி ஏற்படுவதற்கு சில நாட்கள் அல்லது மணிநேரங்களுக்கு முன்பே தென்படுகிறது.
ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்:
கண்களில் 'பளிச் பளிச்' என மின்னுவது, திடீரென சில பகுதிகள் வட்டமாக தெரிவது அல்லது ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது, சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது மற்றும் கண்ணுக்குள் பூச்சி பறப்பது என சில அறிகுறிகள் தென்பட்டால் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்று அர்த்தம்.
பொதுவாக, ஒற்றைத் தலைவலி வந்தால் நெற்றியின் இரண்டு பக்கமும் துடிப்பது போன்ற உணர்வு இருக்கும். முதலில் லேசாகத் தொடங்கும் இந்த வலி, கடுமையானதாக மாறும்.
வலியானது 4 முதல் 72 மணி நேரம் வரை கூட நீடிக்கும். சில சமயங்களில் கண்கள், கன்னங்கள், கழுத்தைச் சுற்றிலும் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.
சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் கீழ்க்காணும் அறிகுறிகளும் தென்படும். இது மிகவும் பொதுவானது மற்றும் அரிதானவையே.
குமட்டல்,வாந்தி,மயக்கம், வயிற்று வலி, சோர்வு, பேச்சில் தடுமாற்றம், கடுமையான பசி, தாகம், கவனம் சிதறல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல்
முகம் அல்லது கைகால்களில் உணர்வின்மை போன்றவையே ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகும்.
செரோடோனின் உற்பத்தி குறைவு:
மூளையில் செரோடோனின் ஹார்மோன் உற்பத்தியின் அளவு குறைவதே ஒற்றைத் தலைவலி ஏற்பட பிரதான காரணமாக கருதப்படுகிறது.செரோடோனின் ஒருவரின் மனநிலையை சந்தோஷமாக வைத்து, பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒரு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் தான் உடலில் பாலுணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதாவது, உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலியை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகரித்து தலைவலியை ஏற்படுத்தும்.
ஹார்மோன் மாற்றங்கள்:
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் ஒற்றைத் தலைவலி வரலாம். அதாவது, மாதவிடாய்க்கு முன் அல்லது மாதவிடாய் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துகிறது.
உணவு முறை:
உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டியது அவசியம். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வோருக்கும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உண்டாவதற்கு அதிகமான வாய்ப்பு உண்டு. அதேபோல், சாக்லேட், டீ, காபி, குளிர்ச்சியான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஒற்றைத் தலைவலியை தூண்டும்.
பார்வை நரம்புகளில் பாதிப்பு:
இரவில் தூங்காமல் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலை நேரத்தில் அதிக நேரம் உறங்குதல் போன்ற சீரற்ற உறக்கநிலையால் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலியை ஏற்படுத்தலாம். மேலும், ஒற்றைத் தலைவலியைத் தடுக்க சீரான தூக்க முறைகளை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. அதாவது, தினமும் இரவில் ஒரே நேரத்தில் உறங்கச் செல்வது, காலையில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
முறையான உணவு பழக்கம்:
உணவைத் தவிர்ப்பது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தலைவலியை உண்டு செய்யும். எனவே, ஆறு அல்லது ஏழு மணி நேரத்திற்கு மேல் உணவு சாப்பிடாமல் இருக்காதீர்கள். தினமும் சரியான நேரத்தில் உணவுகள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.தினமும் காஃபி குடிப்பது சிலருக்கு ஒற்றைத் தலைவலிக்கான ஆபத்தை அதிகரிக்கும். எனவே, தினமும் டீ, காஃபி குடிக்கும் பழக்கும் இருப்பவர்கள் முழுவதுமாக கைவிடமுடியாவிட்டாலும், அளவை குறைத்துக் கொள்ளலாம். உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையும் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மூளையில் வலி உணர்வைக் குறைக்கலாம்.
Read More: