ரூ.800 கோடியில் அரண்மனை.. பல சொகுசு கார்கள்.. நடிகர் சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா..!
பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை கரீனா கபூரின் கணவருமான சைஃப் அலி கான் இன்று அதிகாலை தனது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டார். சைஃப் அலி கான் தனது மனைவி கரீனா மற்றும் இரு மகன்களுடன் பாந்த்ராவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு சைஃப் அலி கான் வீட்டில் திருடுவதற்காக சென்ற நபர் அவரின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அங்கு வந்த சைஃப் அலி கான் குறுக்கிட்டுள்ளார். அப்போது சைஃப் அலிகானை சரமாரியாக குத்திய திருடன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதில் சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையின் லீலாவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைஃப் அலிகானின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு
இந்த நிலையில் நடிகர் சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு ரூ. 1,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது திரை வாழ்க்கை, விளம்பரங்கள், தனிப்பட்ட முதலீடுகள் மற்றும் வணிக முயற்சிகள் என பல வழிகளில் அவருக்கு வருமானம் வருகிறது.
சைஃப் ஒரு படத்திற்கு ரூ.10-15 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் விளம்பரங்கள் மூலம் ரூ.1-5 கோடி வரை சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது, எனினும் சமீபத்திய ஆண்டுகளில் தனது சம்பளத்தை 70 சதவீதம் அதிகரித்துள்ளார்.
இல்லுமினாட்டி பிலிம்ஸ் மற்றும் பிளாக் நைட் பிலிம்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களையும் அவர் வைத்திருக்கிறார், அவை பல வெற்றிகரமான திட்டங்களைத் தயாரித்துள்ளன. மேலும் அவர் ஹவுஸ் ஆஃப் பட்டோடி என்ற ஆடை பிராண்டை மிந்த்ராவுடன் கூட்டு சேர்ந்தார்.
சைஃப் மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு ஆடம்பரமான 4 மாடி மாளிகையில் தனது மனைவி கரீனா கபூர் கான் மற்றும் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.. நவீன வடிவமைப்பு மற்றும் அரச அழகியலின் கலவையான இந்த செழிப்பான சொத்து, பழங்கால கலைப்படைப்புகள், விசாலமான பால்கனிகள் மற்றும் நேர்த்தியான உட்புறங்களைக் கொண்டுள்ளது.
சைஃப் அலிகானும் கரீனா கபூர் கானும் இணைந்து இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் (ISPL) கிரிக்கெட் அணியான டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணியை வைத்திருக்கின்றனர். இந்த முயற்சி சைஃப் அலி கானின் குடும்பத்தின் கிரிக்கெட் பாரம்பரியத்துடன் தொடர்பை பிரதிபலிக்கிறது. அவரது தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி, தனித்துவமான தலைமைத்துவத்திற்காக அறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
சைஃப் அலி கான் சொகுசு கார் சேகரிப்புக்கு பெயர் பெற்றவர். அவரிடம் Mercedes-Benz S350 (ரூ.1.71 கோடி), ஒரு Audi Q7 (ரூ.85-95 லட்சம்) மற்றும் ஒரு Jeep Wrangler (ரூ62.64-66.64 லட்சம்) ஆகிய ஆடம்பர கார்கள் உள்ளன.
சைஃப் அலி கானின் பரம்பரை
ஹரியானாவில் உள்ள புகழ்பெற்ற பட்டோடி அரண்மனையின் பெருமைமிக்க வாரிசு சைஃப் அலி கான் ஆவார். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அற்புதமான எஸ்டேட்டில் 150 அறைகள், வெளிப்புற நீச்சல் குளம் மற்றும் ஒரு பில்லியர்ட்ஸ் அறை உள்ளன. இந்த அரண்மையின் மதிப்பு சுமார் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. 2005 முதல் 2014 வரை, இந்த அரண்மனை நீம்ரானா ஹோட்டல் குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின்னர் சைஃப் அலி கான் அந்த சொத்தை மீட்டெடுத்தார். இந்த பிரம்மாண்ட அரண்மையில் வீர்-ஜாரா (2004), மங்கள் பாண்டே (2005), ஈட் பிரே லவ் (2010), மற்றும் தந்தவ் (2019) உள்ளிட்ட பல பாலிவுட் படங்கள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.