புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு சிக்கல்.. கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு..!! - தமிழக அரசு அதிரடி
புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது. அதேபோல் புறம்போக்கு நிலம் என்று தெரியாமல் வாங்கி குடியிருப்போரும் சிக்கலை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் நாம் குடியிருக்கும் இடம் புறம் போக்கு இடமா என்பதை எப்படி கண்டறிவது? நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன? தமிழக அரசின் புது அறிவிப்பால் ஏற்பட போகும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழக அரசு மேஜர் உத்தரவு ஒன்றை கலெக்டர்களுக்கு பிறப்பித்தது. இந்த உத்தரவின் காரணமாக தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து பலர் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் கட்டி வசித்து வருபவர்கள் சிக்கலை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் ஏற்கனவே நீதிமன்றங்கள் பலமுறை அரசுக்கு உத்தரவிட்டுள்ளன. எனவே அந்த நிலங்களை மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு, அகற்ற 3 குழுக்களை அமைத்துள்ளது. மண்டல அளவிலான குழுக்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறியும். மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதனை மாநில அளவிலான குழுக்கள் கண்காணிக்கும்.. இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக கிரிமனல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து அரசு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் மீட்டது தொடர்பாக ஒரு முறையான பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். அதில் அந்த நிலத்தை சர்வே எண் உள்பட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பணிகளை நிலநிர்வாக ஆணையர் கண்காணித்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அரசு நிலங்களை எப்படி கண்டுபிடிப்பது? அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், அரசு யாருக்கும் பட்டா வழங்காத நிலங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதனை வைத்தே இந்த நிலங்களை வாங்கலாமா வேண்டாமா அல்லது குடியிருக்கும் நிலம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும். அதேபோல்புறம்போக்கு நிலங்களை பார்வையிட https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற தளத்திற்குபோய் அரசு புறம்போக்கு நிலங்களை பார்வையிட என்ற தலைப்பில் போய் பார்க்க முடியும். அதில் மாவட்டம், தாலுகா, கிராமத்தை தேர்வு செய்து, புல எண், உட்பிரிவு எண்ஆகியவற்றை குறிப்பிட்டு பார்க்க முடியும்.