வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடு!… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித் தரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த 15, 16, 17 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில் அந்த மாவட்டங்களை சுற்றியுள்ள ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்பட்டது . இதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். இதில் சிலர் உயிரிழந்தனர். இதையடுத்து, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
இந்தநிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று வெள்ள பாதிப்பை நேரில் சென்று நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் அவர் சென்ற போது அங்கிருந்த பெண்கள் அவரை கைகூப்பி வணங்கினர். இதை பார்த்த நிர்மலா சீதாராமன், உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி அவர்களிடம் சென்று பேசினார். அப்போது அந்தப் பெண்கள் வெள்ளத்தில் தாங்கள் சந்தித்த இன்னல்கள் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதனை கேட்ட நிர்மலா சீதராமன், அவர்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த சில பெண்கள் தங்கள் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறி அழுதனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், இதற்கு நீண்டகாலம் ஆகாது.. ஒருசில மாதங்களிலேயே வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். மேலும், இதுதொடர்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்