உச்சநீதிமன்றத்தில் புகுந்த மர்மநபர்!. 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை!. ஈரானில் பயங்கரம்!
Iran: ஈரான் உச்ச நீதிமன்றத்துக்குள் புகுந்த மர்ம நபர், இரண்டு நீதிபதிகளை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று(18) சனிக்கிழமை காலை திடீரென நீதிமன்றத்திற்குள் ஆயுதமேந்திய மர்மநபர் நுழைந்துள்ளார். இதையடுத்து, நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini) மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) இருவரையும் சுட்டுக் கொன்றதாக நீதித்துறை செய்தி வலைத்தளமான மிசான் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் தப்பிச் செல்லும்போது தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தாக்குதலில் நீதிபதி அறையில் இருந்த பாதுகாவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் பலியான இருவரும், தேசிய பாதுகாப்பு, உளவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதிகள் என கூறப்படுகிறது.
மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை, ஆனால் 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்தி கொலை செய்வதில் இரு நீதிபதிகளும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. பல குற்றவாளிகளுக்கு இவர்கள் மரண தண்டனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்களில் யாராவது, இருவரையும் சுட்டுக் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும், இந்த கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரானில் கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் மரண தண்டனை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.