அரபிக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..? இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தகவல்..!!
அரபிக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை கரையை கடந்த பிறகு வலுக்குறைந்துள்ளது. அதன் எச்சம் தற்போது வட தமிழகம் மீது நிலை கொண்டுள்ளது. இது இன்றைக்குள் வட கேரளா - கர்நாடக கடற்பகுதியின் மீது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
10 மணி வரை மழை
தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 3) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்தது. மேலும், இது புயலாக மாறுமா, மாறாதா என கணிப்பதே வானிலை மையத்திற்கு சவாலான காரியமாக இருந்தது. இதையடுத்து, ஃபெஞ்சல் புயல் உருவானதாக அறிவிக்கப்பட்டது. இது கடலிலேயே வலுவிழந்து கரையைக் கடக்கும் என முன்பு கூறப்பட்ட நிலையில், பின்னர் புயலாகவே கரையை நெருங்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல், 6 மணி நேரம் கழித்து, இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்ததாகவும், புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், மேற்கு - தென்மேற்கு திசையில் நகரும் ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : தினமும் ஒரு செவ்வாழை பழம் போதும்..!! இதய நோய், சிறுநீர், ஹீமோகுளோபின் பிரச்சனைகளுக்கு தீர்வு..!!