National Cancer Awareness Day 2024 : தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் உருவான வரலாறு ஒரு பார்வை..!!
மனிதர்களுக்கு இயற்கை அளித்துள்ள எதிர்ப்பு சக்தி, சமநிலையான சத்தான உணவு மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் மனிதர்கள் பெறுகின்ற ஆரோக்கியம், வாழ்நாள் முழுதும் அவர்கள் உடலை நோய் அண்டாத நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் பொதுவாக சாதாரணமாக நோய் வந்தாலும் மனிதர்கள் பெரும்பாலும் மனதளவில் அஞ்சுவதில்லை. ஆனால், ஒரு சில நோய்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளது. அவற்றில் கேன்சர் (cancer) எனப்படும் "புற்றுநோய்" அடங்கும்.
புற்றுநோயால் இறக்கும் மக்களின் நிலை இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் 8.5 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். இந்த காரணத்திற்காக, இந்த வகை புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்கூட்டியே துல்லியமாக நோயை கண்டறிவது குறித்தும், நோய் சிகிச்சைக்கான வழிமுறைகளை கணிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கம்..
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 7 ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மக்கள் மத்தியில் மரணத்தை ஏற்படுத்தும் 2வது கொடிய நோயாக புற்றுநோய் உள்ளது.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் வரலாறு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முதன்முதலில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு அறிவித்தார். அவர் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மாநில அளவிலான இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் நகராட்சி கிளினிக்குகளில் இலவச பரிசோதனை செய்துக்கொள்ள மக்களை ஊக்குவித்தார். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றிய சிறு புத்தகமும் அப்போது விநியோகிக்கப்பட்டது.
இந்த கொடிய நோய்க்கு எதிராக நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை 1975 ஆம் ஆண்டு தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் துவக்கத்துடன் தொடங்கியது. இது நாட்டில் புற்றுநோய் சிகிச்சையை எளிதாக்கும் வகையில் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1984-85 ஆம் ஆண்டில், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பதில் கவனம் செலுத்த திட்டத்தின் அணுகுமுறை திருத்தப்பட்டது.
முக்கியத்துவம் : புற்றுநோயை தவிர்ப்பதும், அதனை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு விடுபடவும் இந்த விழிப்புணர்வு உதவும். உரிய உணவுப் பழக்கம், உடலோம்பல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் முதல் மருத்துவ காப்பீடு வரை இந்த விழிப்புணர்வுகள் விரிகின்றன. விழிப்போடு இருப்போம்; நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் புற்றுநோய் பீடிக்காது காப்போம்!
Read more ; வேலூர் பெண்ணிற்கு அடித்தது ஜாக்பாட்.. கடன் வாங்கிய வங்கியிடமே இழப்பீடு..!! – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி