குண்டடிபட்டு கிடக்கும் போது.. முகுந்த என்னால காப்பாத்த முடியல.. அன்னைக்கு இதுதான் நடந்துச்சு!! - நேரில் பார்த்த நண்பர் எமோஷனல் பேச்சு
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த அமரன் திரைப்படத்தை பார்த்த பலரும் படத்தின் நிஜ நாயகன் மேஜர் முகுந்த் வரதராஜனினை பற்றி பலரும் பேசி வருகின்றனர். காஷ்மீரில் நடைபெற்ற ஒரு இராணுவ ஆப்ரேஷனில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் இராணுவ வீரர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேஜர் முகுந்த் எப்படி உயிரிழந்தார் என்பதைப் பற்றியும் அவரது கடைசி 15 நிமிடங்கள் போராட்ட வாழ்க்கைப் பற்றியும் அவருடன் ராணுவத்தில் பணியாற்ற்டிய நண்பர் ஏழுமலை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம்.
அவர் அளித்த பேட்டியில், "2012 முதல் 2014 வரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஷோபியான் பகுதியில் 44 ஆர்ஆர் ரெஜிமென்ட் படைப் பிரிவில் வேலை பார்த்தேன். அங்குதான் நான் முதன்முதலாக முகுந்த் வரதராஜனைச் சந்தித்தேன். ஒரு ஆபரேஷனில் இணைந்து பணியாற்ற தொடங்கினோம். அல்தாப் பாபா ஆபரேஷன் தொடங்கப் போகிறோம் என திடீரென்றுதான் சொன்னார்கள். ஒரு நாள் மற்றும் ஒரு இரவு முழுக்க வேட்டை நடந்தது. அதன்பின்புதான் வெற்றி பெற்றோம். எதிரி படை ஆட்கள் சுடத் தொடங்கினார்கள். அதை எதிர்த்து நாங்களும் குண்டுகளை வீசினோம்.
அப்போதுதான் மாலை 5:30 மணி இருக்கும். மேஜர் முகுந்த் அடிபட்டார். அவரைக் காப்பாற்ற நான் முன்னேறிப் போனேன். அதை உணர்ந்த எதிரி ஆசிப் படை சுட்டார்கள். அதில் விக்ரம் மீது குண்டு பாய்ந்தது. அடுத்து முகுந்த் சுடத் தொடங்கினார். அதில் தீவிரவாதி ஆசிப் உயிரிழந்தார். கூடவே முகுந்த் மீதும் குண்டு பாய்ந்து அவர் காயமடைந்து கீழே விழுந்தார். முதலில் குண்டடிபட்டதை முகுந்த் உணரவில்லை. தரையில் சரிந்து விழுந்த பிறகே அவரால் அதை உணர முடிந்தது.
அவர் விழுவதை நாங்கள் பார்க்கிறோம். ஆனால், உடனே போய் அவரை தூக்க முடியாது. தாக்குதல் பலமாக இருந்தது. 15 நிமிடங்கள் அவர் துடிப்பதைப் பார்க்கிறோம். எங்களால் ஒன்றுமே செய்ய முடியாத சூழல். கண்கள் கலங்கியபடி நாங்கள் மறுபுறம் தவிக்கிறோம். முகுந்த் குண்டடிபட்ட தகவலை நான் தான் ராணுவ அதிகாரிகளுக்குத் தெரிவித்தேன். பிறகு நான் தீவிரவாதிகளைச் சுட ஆரம்பித்தேன். இறுதியாக முகுந்த் அருகில் சென்று அவரை தூக்கி இழுத்துக் கொண்டு நம் எல்லைக்கு வந்தேன். அப்போதே அவர் நிலை சரிந்துவிட்டார்.
முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினோம். அவர் என் கண்முன் உயிருக்கும் போராடியதைப் பார்த்த போது என் கண்கள் இருண்டுவிட்டன. என் இதயத் துடிப்பு எனக்குக் கேட்கும் அளவுக்கு நான் பதற்றமாக இருந்தேன். பிறகு ராணுவப் படையிலிருந்த ஏணியில் அவரை வைத்து மருத்துவ வாகனத்திற்குக் கொண்டு வந்தோம். அதன்பின் ஹெலிகாப்டர் வந்தது. அவரை சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். என்ன ஆனது? உயிருடன் இருக்கிறாரா? என ஒன்றும் தகவல் கிடைக்கவில்லை.
மறுநாள் மதியம்தான் அவர் வீரமரணமடைந்தார் என செய்தி வந்தது. எங்கள் படைக்கு தலைமைத் தாங்கிய அதிகாரியை இழந்துவிட்டோம் என அப்போதுதான் அறிந்தோம். அவருக்குச் சீருடையில் வீர வணக்கம் செலுத்திட்டு, அறைக்கு வந்து கதறி அழுதோம். ராணுவ உடையில் நாங்கள் அழ முடியாது. அதற்கு இடம் இல்லை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்பதை அறிந்துதான் எல்லையில் தீவிரவாதிகளை எதிர்த்து போராட போகிறோம். எனவே உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் அங்கே இடமில்லை.
அறைக்கு வந்த பிறகு நாங்கள் சாதாரணமான மனிதர்கள். அங்கேதான் நாங்கள் எங்கள் உணர்வுகளைக் கொட்ட முடியும். நாட்டுக்காக ஒரு உண்மையான வீரனாக முகுந்த் இருந்தார். அவரைப் பார்த்துப் பல நேரங்களில் நான் உத்வேகம் பெற்றுள்ளேன். அவரின் கடைசி 15 நிமிடங்களை என்னால் வாழ்நாள் முழுக்க என்றுமே மறக்கவே முடியாது" என்கிறார்.