வரும் 17-ம் தேதி சிறப்பு முகாம் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு ...!
கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் வரும் 17-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் 17.12.2024 அன்று மாலை 04.00 மணிக்கு, அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம், தி.நகர் அஞ்சல் அலுவலக வளாகம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் சென்னை 600017 என்ற முகவரியில் நேர்முகமாக நடைபெறும். அஞ்சல் துறை சார்ந்த சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகளை கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு பிரிவின் தலைவர் நேரடியாக விசாரிப்பார்.
வாடிக்கையாளர்கள் தங்களின் புகார்களை அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர், சென்னை நகர தெற்கு கோட்டத்திற்கு 16.12.2024 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பவேண்டும். தபால்/ மணியார்டர், பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் குறித்து, அனுப்பப்பட்ட தேதி, அனுப்புனர் மற்றும் பெறுநர் பெயர், முகவரி, கண்காணிப்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகார்கள் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
புகார்கள் சாதாரண தபாலிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ அனுப்பப்பட வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. புகார்கள் அனுப்பப்படும் உறையின் மீது கோட்ட அளவிலான குறை தீர்வு முகாம் – சென்னை நகர தெற்கு கோட்டம் என்று குறிப்பிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.