#Alert: விசாகப்பட்டினத்தில் இருந்து 510 கி.மீ தென்கிழக்கே நிலை கொண்ட தாழ்வு மண்டலம்...!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூரில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.