ஆற்றில் கிடைத்த உடல்பாகம்!… வெற்றி துரைசாமியின் உடலா என டிஎன்ஏ டெஸ்ட்க்கு உத்தரவு!… 3வது நாளாக தேடும் பணி தீவிரம்!
சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் வெற்றி துரைசாமி மாயமானநிலையில், ஆற்றில் கிடைத்த உடல் பாகத்திற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர் சைதை துரைசாமி, மனிதநேயம் ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்தி வருகிறார். இவரது மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர் கோபிநாத் என்பருடன் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு அவர்கள் இருவரும் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த உள்ளூரைச் சேர்ந்த தன்ஜின் என்பவர் காரை ஓட்டியுள்ளார்.
இந்த கார் சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 மீட்டர் ஆழத்தில் உள்ள ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கோபிநாத் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் வெற்றி துரைசாமி மாயானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதனிடையே சில இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறிய இமாச்சலப் பிரதேச காவல்துறை வெற்றி துரைசாமி குறித்து, தகவல் அறிய 2 நாளாகும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேடுதலில் ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.