தீயாக பரவும் பறவைக் காய்ச்சல்... டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டம்...!
கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, பறவைக் காய்ச்சல் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்ட அமர்வை நடத்தியது. ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறையின் கீழ் கண்காணிப்பு, தடுப்பூசி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலாளர் அல்கா உபாத்யாயா தலைமையில் டெல்லியில் இக் கூட்டம் நடைபெற்றது.
சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாஹல், ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் குறித்து விளக்கினார். உயர்தர புரதத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவில் கோழிப்பண்ணைத் துறை உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு கணிசமாக பங்களிப்பதுடன் பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது, குறிப்பாக கிராமப்புறங்களில்.
கடந்த பத்து ஆண்டுகளில் 7 முதல் 10 சதவீதம் வர இத்துறை சீராக வளர்ந்துள்ளது. இந்தத் துறை, வர்த்தகம், ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் ஏற்படும் பறவைக் காய்ச்சல் ஏற்றுமதியைத் தடுக்கிறது. இந்த அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கு மேம்பட்ட ஒருங்கிணைப்பு, விரிவான உத்திகளுடன் மனித, விலங்கு ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்கும் சுகாதார அணுகுமுறை தேவைப்படுகிறது. நேற்று நடைபெற்ற கூட்ட அமர்வில் மனித சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு, வனவிலங்கு போன்றவை தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம்பெற்றன. கண்காணிப்பு நெறிமுறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.