13 வயது சிறுமிக்கு 5 மணி நேரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை...! அசத்திய மருத்துவர்கள்
கேரளாவில் இதய நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் இருந்த 13 வயது சிறுமிக்கு 5 மணி நேர இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் கேரளாவில் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கழகம், இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது. குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது அதிக செலவு பிடிப்பதோடு, இதயம் கிடைப்பதும் அரிதாக இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கூட, இத்தகைய சிகிச்சை பலருக்கு கிடைக்காத நிலை உள்ளது.
இந்த அறுவை சிகிச்சை மூலம், இத்தகைய மருத்துவ வசதி அதிகம் கிடைக்கும் அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக ஸ்ரீசித்திரை திருநாள் மருத்துவமனையும் இணைந்துள்ளது. இந்த மருத்துவமனை இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு சென்ற ஆண்டு தான் அனுமதி பெற்றது. இதன் அடிப்படையில், திருச்சூரின் சவக்காட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு தற்போது இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், 47 வயதான பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து மூளைச்சாவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது இதயம் தானமாக பெறப்பட்டது. கேரள மாநில உறுப்பு, திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு இந்த இதயத்தை அந்த சிறுமிக்கு ஒதுக்கியது. டாக்டர் பைஜூ எஸ் தரன், டாக்டர் விவேக் வி பிள்ளை, டாக்டர் சௌமியா ரமணன் உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவும் அவர்களின் உதவியாளர்களும் இந்த நீண்ட நேர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இந்த இதய மாற்று அறுவை சிகிச்சையை திருமதி பீனா பிள்ளை ஒருங்கிணைத்தார். இதயத்தை விரைவாக கொண்டுவருவதற்கு பசுமை வழித்தடத்தை கேரள காவல் துறை ஏற்பாடு செய்திருந்தது.