அடேயப்பா… 1,000 வருட பழமை வாய்ந்த தர்கா தமிழ்நாட்டிலா.? இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா.?
தமிழகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் நகரமான திருச்சி வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. இங்குதான் வரலாற்று சிறப்புமிக்க கல்லணை இருக்கிறது. மேலும் மலைக்கோட்டை போன்ற வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலங்களும் இங்கு உள்ளன. அந்த வரிசையில் பெரும்பாலான மக்களால் அறியப்படாத ஒரு வழிபாட்டு தளம் இருக்கிறது. அதுதான் திருச்சியில் அமைந்திருக்கும் நத்தர்ஷா வலி பள்ளிவாசல்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தர்கா சூஃபி ஞானியான ஹசரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி அவர்களின் அடக்க ஸ்தலத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் சுல்தானாக இருந்த நத்தர்வலி தனது மன்னர் பதவியை சகோதரரிடம் கொடுத்துவிட்டு திருச்சிக்கு வந்து பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும் சேவைகளையும் செய்திருக்கிறார். அவர் இறந்த பின்பு அவரது உடல் திருச்சியிலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த தர்கா இந்தியாவில் இருக்கும் பழமையான தற்காக்களில் ஒன்றாகும். நாடெங்கிலும் இருந்து இன மற்றும் மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த தர்காவிற்கு வந்து நத்தர்வலியை தரிசித்து விட்டு செல்கின்றனர். இது பழமையான வழிபாட்டு சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருக்கிறது. திருச்சியின் சிங்காரத்தோப்பு பகுதியில் இந்த தர்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் சந்தனக்கூடு மிகவும் பிரசித்தி பெற்றது.
திருச்சியின் காந்தி மார்க்கெட் ஆர்ச்சிலிருந்து தொடங்கும் ஊர்வலம் பெரிய கடை வீதி மற்றும் சிங்கார தோப்பு வழியாக சென்று அதிகாலை பள்ளிவாசலை அடையும். இது திருச்சியில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்தே இருக்கும். இந்தியாவில் இருக்கக்கூடிய பிரதான வழிபாட்டு தலங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.