ஒரே பாணியில் 9 பெண்கள் அடுத்தடுத்து கொலை..!! ஆட்டம் காட்டும் சைக்கோ கொலையாளி..!! பீதியில் மக்கள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் சிஷ்கர் மற்றும் ஷாஹி அடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடுத்தர வயது பெண்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகின்றனர். 45-ல் இருந்து 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அவர்கள் அணிந்திருக்கும் புடவை அல்லது தலை முக்காட்டுக்கு பயன்படுத்தப்படும் துணியால் கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி ஜகதீஷ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா தேவி (55) என்ற பெண் வயல் பகுதியில் புடவையால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடந்த 6 மாதத்தில் நடைபெற்ற 9-வது கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்மிளா தனது வயலுக்கு மாட்டுத் தீவனம் எடுக்கச் சென்ற நிலையில், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது கணவர் வயலுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வயலுக்கு அருகே ஊர்மிளா தேவி அணிந்திருந்த வளையல்கள் நொறுங்கி கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வயலுக்கு ஓடியுள்ளார். அங்கு போர்வை ஒன்றில் ஊர்மிளாவின் உடல் சுற்றப்பட்டுக் கிடந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த 6 மாதத்தில் இதேபோல் 8 பெண்கள் அவர்களது சேலையால் கழுத்து இறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் ஒரே பாணியில் நடைபெறும் இந்த கொலைகளை சைக்கோ கொலைகாரன் அரங்கேற்றி வரலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால், சிஷ்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.