81 கோடி இந்தியர்களின் தகவல்கள் விற்பனைக்கு.! பாகிஸ்தான் மற்றும் FBI-யிடமும் கைவரிசை.! அதிர்ச்சியில் சிபிஐ அதிகாரிகள்.!
81 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்திருக்கும் சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு குறித்த தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த புலனாய்வுத் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்களது விசாரணையின் முடிவில் 81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விபரங்கள் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் தகவல் வங்கியில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் பேரில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த பி.டெக் பட்டதாரி மேலும் ஹரியானாவை சேர்ந்த நபர் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொதுமக்களின் தகவல்களை திருடி டார்க் வெப்பில் விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த சிபிஐ அதிகாரிகள் இதற்குப் பின்னணியில் வேறு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வுத்துறை கணினியிலிருந்தும் தகவல்களை திருடி இருப்பது தெரிய வந்தது. மேலும் பாகிஸ்தான் தகவல் வங்கியில் இருந்தும் இவர்கள் தகவல்களை திருடி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்களிடம் ஏதேனும் சர்வதேச சதி வேலைகள் இருக்கிறதா என்ற கோணத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் தகவல்கள் திருடப்பட்டு டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.