கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்..!! ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள்..!!
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு என்பதால், இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவை வளாகம் வந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சில நிமிடங்களிலே புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரசியல் சாசனம், தேசிய கீதம் அவமதிப்புக்கு துணை போக முடியாது என ஆளுநர் வெளியேறியுள்ளார். தேசிய கீதம் பாட வேண்டும் என முதலமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், தேசிய கீதம் பாடப்படவில்லை. சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டது.
கான்கிரீட் வீடு
இந்நிலையில் ஆளுநரின் உரையில், ஏழைக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஊரக வீட்டு வசதி திட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1 லட்சம் தான் என்றும், ஆனால் மாநில அரசு ரூ.1.72 லட்சம் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.