கன்னியாகுமரி ; கடலில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி.. சுற்றுலா சென்ற போது நிகழ்ந்த விபரீதம்!
கன்னியாகுமரி அருகே கணபதிபுரத்தில் கடலில் குளித்த இரண்டு மாணவிகள் உட்பட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 12 பேர் நாகர்கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக நேற்று நாகர்கோயில் வந்துள்ளனர். இன்று காலை பிரபல சுற்றுலா தளமாக லெமூர் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது 9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில் அவர்களை ராட்ச அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடலில் சிக்கியவர்களை மீட்ட போது, 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், கடலில் இருந்து மீட்கப்படவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம், காயத்ரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் தர்சித் ஆகிய 5 பேரின் உடல்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜகமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.