40 ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 854 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும். இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் மற்றும் நகரத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஊர்க்காடு வருவாய் கிராமத்தில் 1800 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
வருவாய் நிலை ஆணை 21-ன் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் வீட்டுமனை ஒப்படை ஆணைகள் இணைய வழியில் வழங்கப்படும். நவீன நில அளவை கருவியைப் பயன்படுத்தி பராமரிப்பு நில அளவை செய்து பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படும். பதிவுத்துறையில் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ் போன்று ஒரு புல எண்ணில் குறிப்பிட்ட காலத்தில் இணைய வழியில் நடந்த பட்டா மாற்ற விவரங்களை அறிக்கையாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.
பத்திர பதிவின்போது சொத்து விவரங்களை சரிபார்க்க ஏதுவாக, புலப்படத் தரவுகள் பதிவுத்துறைக்கு பகிரப்படும். பத்திர பதிவின்போது சொத்து விவரங்களை சரிபார்க்க ஏதுவாக, புலப்படத் தரவுகள் பதிவுத்துறைக்கு பகிரப்படும். பட்டா மாற்றம் மற்றும் புல எல்லைகளை அளவீடு செய்தல் போன்ற சேவைகளை கண்காணித்து அவற்றின் தரத்தினை பேணும்பொருட்டு தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.