உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம்...! மத்திய அமைச்சர் தகவல்
சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோலிய பொருட்களின் அதிக விலை, ஏற்றுமதி வரி உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் சுமையை பொதுமக்கள் மீது ஏற்றாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்; 2021 நவம்பர் மற்றும் 2022 மே மாதங்களில் மத்திய அரசு, மத்திய கலால் வரியை பெட்ரோலுக்கு லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 16 ரூபாயும் குறைத்தது என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் நுகர்வோருக்கு பெட்ரோலிய பொருட்களின் விலையில் நிவாரணம் கிடைத்தது. சில மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தன. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்தது. இதன் காரணமாக தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.72 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.87.62 ஆகவும் விற்பனையாகிறது என்று அவர் கூறினார்.
சமையல் எரிவாயு நுகர்வுக்காக இந்தியா 60 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி செய்து வருகிறது. சர்வதேச சந்தைக்கு இணையாக நாட்டில் எல்பிஜி விலை உள்ளது என்ற தகவலையும் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் விலை உயர்வு ஏற்பட்ட போதிலும் அதனை நுகர்வோர் தலையில் ஏற்றாமல் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் எல்பிஜி விநியோகத்தை அரசு மேற்கொண்டுள்ளது என அவர் கூறினார். 2022 மே மாதம் 21-ம் தேதி முதல், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மேலும் ரூ.100 மானியத்தை மத்திய அரசு அறிவித்தது. மொத்தம் சிலிண்டருக்கு தற்பொழுது 300 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது என்றார்.