ஆவின்... பேக் செய்யப்பட்ட மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு...!
2024 ஏப்ரலில் பேக் செய்யப்பட்ட மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசு நடத்தும் ஆவின் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு, கரூர், திருப்புத்தூர் போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.
வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பேக் செய்யப்பட்ட மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசு நடத்தும் ஆவின் தெரிவித்துள்ளது.
ஆவின் அதிகாரிகளின் கூறியதாவது, ஏப்ரல், 2023 இல், ஒரு நாளைக்கு 30,000 மோர் பாட்டில்கள் விற்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல், 2024) ஒரு நாளைக்கு 40,000 மோர் விற்பனையானது. சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, இந்த ஆண்டு பேக் செய்யப்பட்ட மோர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், பாக்கெட் மோர் விற்பனையும் அதிகரித்துள்ளது. "ஏப்ரல், 2023 இல் 10,000 பாக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், 2024 ஏப்ரலில் ஒரு நாளைக்கு 18,000 பாக்கெட்டுகள் விற்கப்பட்டன" என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வரும் நாட்களில் மேலும் தேவை அதிகரிக்கும் என்பதால், உற்பத்தியை அதிகரிக்க ஆவின் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.